Thursday, 29 May 2014

அச்சுக்கலை அறிமுகம்!


உலகம் துவங்கிய காலத்திலிருந்தே கலைகளும் மனிதனுடனே தொடர்ந்து வந்திருக்கின்றன. அவற்றில் பழமையான கலையாக உள்ளது ஓவியம் என்றே சொல்லலாம். நாகரிகம் துவங்கியதோ தெரியவில்லை, ஆனால் கையில் கிடைத்ததை வைத்து ஓவியம் வரைந்திருக்கிறான் என்பதற்கு சான்று குகைகளில் வரையப்பட்டிருக்கும் ஓவியங்கள்.

அநேகமாக மொழி தோன்றும் முன்னமே மனிதன் சிந்திக்க துவங்கிவிட்டான் எனபது மட்டும் உண்மை. அவன் எண்ணத்தில் உதித்ததை வண்ணத்தில் காண்பித்துள்ளான். அந்த சிறப்பான ஓவியக்கலை பல படிநிலைகளை கடந்து வந்து நவீன ஓவியமாக வளர்ந்திருக்கிறது.

மொழிகள் உருவான பிறகு அவனின் சிந்தனைகள் சொற்களாகவும், வாக்கியங்களாகவும்  வடிவம் பெற்றன. அவைகளும் வெறும் சிந்தனைகளாக இல்லாமல் கல்வெட்டுகளாகவும், ஓலைசுவடிகளாகவும் எழுத்து வடிவில்  அடுத்த நிலையை அடைந்தன.

இவைகள் யாவும் அறிவியல் கலக்காமல் இயற்கையாக மனிதன் வாழ்ந்தவரை தொடர்ந்தன. என்று மனிதனின்  சிந்தனை விரிய துவங்கியதோ அன்று அவனால் இயற்கை பொருட்களுடன் தன் சிந்தனையை வெளிப்படுத்துவதை தொடர முடியவில்லை. ஒரேபோல் நிறைய பிரதிகளும் தேவைப்பட்டன. பல நூற்றாண்டுகளாக தொடர்ந்து வந்த இந்த கலைப்பயணம் புதிய வேகத்தில் வேறு பரிமாணத்தில் வடிவம் பெற துவங்கின.

சிந்தனையும், ஓவியமும் ஒருங்கே இணைந்து எண்ணங்களை வெளிப்படுத்த துவங்கியதுதான் இந்த அச்சுக்கலையின் துவக்கம் என்றே சொல்லலாம். அதற்குள் காகிதமும்,  மையும் கண்டுபிடிக்கப்பட்டிருந்தது மற்றுமொரு சிறப்பு!



பதினான்காம் நூற்றாண்டில் இந்த தாகம் ஜெர்மானிய கண்டுபிடிப்பாளர்  ஜோஹன்னேஸ் குடென்பெர்க் (Johannes Gutenberg) என்பவரால் இப்பொழுதுள்ள நிலையை அடைந்தது. கையெழுத்து பிரதிகளாக இருந்த பக்கங்கள் குடென்பெர்கின் அறிய கண்டுபிடிப்பான அச்சு எந்திரத்தின் மூலம் அச்சடிக்கப்பட்ட பக்கங்களாயின. அதன்மூலம் கருத்துக்கள் வேகமாக பரப்பப்பட்டன.

அதன் பின் வேகமாக வளர்ச்சியடைந்த அச்சுமுறை கணிணியின் ஆதிக்கத்தால் பல மாற்றங்களையும் முன்னேற்றங்களையும் கண்டது. வேகமான வளர்ச்சி வேகமான தொழில் நுட்பத்தையும் தந்தது. கோர்க்கப்பட்ட எழுத்துப்பலகை இல்லாமல் கணிணி மூலம் அச்சுக்களை வடிவமைக்க துவங்கியதுதான் இன்றைய Desktop Publishing (DTP) ன் துவக்கம். ஓவியம், புகைப்படம், பலவகையான எழுத்துக்கள் என அழகும் கலையும் சிந்தனையும் பிண்ணிபினைந்தன. தொழில்நுட்பமும் அழகும் நிறைந்த நவீன அச்சுக்கலை உருவானது!